Followers

my adds

Wednesday, 25 May 2016

Lungs Weakness of Children ( குழந்தைகளின் நுரையீரல்---பலவீனம்)


பலவீனம் ஆகிறது சென்னை குழந்தைகளின் நுரையீரல்!
சூழல் மாசு அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்




2013ம் ஆண்டு சமூக மருத்துவத் துறையின் மேற்படிப்புக்காக ஒரு மாணவர், ‘காற்று மாசுக்கேடு அதிகமுள்ள  பகுதிகளில்  மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற வகையில் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அதன் பின் இதை  விரிவாக செய்தால் பலருக்கும் பயனுடையதாக இருக்குமே என எங்களது சமூக மருத்துவத்துறையும், சென்னை ஐஐடி  கல்வி நிறுவனமும் இணைந்து ஆய்வை விரிவுபடுத்தினோம். முக்கியமாக சென்னையில்  காற்று மாசுக் கேடு  அதிகமுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த ஆய்வை செய்தோம்.

தி.நகர் போன்ற போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் வாகனங்களின் புகையால் காற்றானது பெருமளவு மாசுக்கேடு  அடைந்துள்ளது. இப்படி மாசுக்கேடு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் குழந்தைகளின் நுரையீரல் பெருமளவு  பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 204 சிறுவர்களை பரிசோதனை செய்தோம். தி.நகர் பள்ளியில் பாதி சிறுவர்களுக்கு நுரையீரல் தேவைக்கு குறைவாக வேலை செய்யும் அளவிலேயே இருந்தது. சிலருக்கு நுரையீரலில் நோய்த்தொற்றும்  இருந்தது. சரியாக சிகிச்சையளிக்காமல் விட்டால் சரியாக சுவாசிக்க முடியாமல் போவது, நுரையீரல் சுருங்குதல் போன்றவை நிகழும்.

எதிர்ப்பு சக்தியின் அளவு கூட சிலருக்கு குறைகிறது. இதனால் காற்றின் வழியாக வரும் தேவையற்ற மாசுக்கள்  நுரையீரலில் சென்று பாதிக்கிறது. ஐஐடி வளாகத்துள் இருக்கும் பள்ளியின் சிறுவர்களுக்கு இவ்வித பாதிப்புகள் அதிகம்  இல்லை. வாகனப் போக்குவரத்து அதிகம் கிடையாது. புகை மண்டலம் இல்லை. இயற்கையான மரங்கள், செடி கொடிகள் என பசுமையாக சூழலை பராமரிப்பதால் நுரையீரல் பாதிப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

சென்னையில் வாகனங்களின் பெருக்கம்தான் அதிக அளவில் மாசுக்கேடுகளை உருவாக்குகின்றன. இது சுவாசப்  பிரச்னைகளை மட்டும் உருவாக்குகிறது என பலர் நினைத்துக்கொள்வார்கள். உண்மையில் உச்சி முதல் உள்ளங்கால்  வரை பல பிரச்னைகளை சுற்றுப்புற மாசுக்கேடுகள் ஏற்படுத்துகின்றன. முடி கொட்டுதல், இளம் வயதில் முடி நரைத்தல்இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்படைதல், இளம் வயதிலேயே வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்துவது போன்ற  பிரச்னைகள் ஏற்படுவதற்கு சுற்றுச்சூழல் மாசுக்கேடு முக்கிய காரணம்.

முதியவர்களுக்கு இதனால் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தையின்மை பிரச்னை உருவாகக் கூட  சுகாதாரமில்லாத சுற்றுச்சூழல் காரணமாக அமைகிறது என்பதால், இந்த விஷயத்தில் தம்பதிகள் கவனமாக இருக்க  வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. நுரையீரலையும் சரியான  முறையில் செயல்பட விடாது.

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. காற்றடிக்கும் போது 3  முதல் 4 அடி வரை தூசி பறக்கிறது. இதனாலும்  மாசுக்கேடு பாதிப்புகள் சென்னையில் அதிகமாக உள்ளன. புதிய  சாலைகள் போடுவதன் மூலமும் சாலையை சுத்தமாக குப்பைகளின்றி பராமரிப்பதாலும் மட்டுமே, இத்தகைய தூசிப்  படலம் எழுவதை தடுக்க முடியும்.சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க  உணவுகளை கொடுத்தால் உடலில் நல்ல எதிர்ப்புசக்தி உருவாகி நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். பள்ளிகளின் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பள்ளிகளின் போர்டு, தரையில் உள்ள தூசிகளை துணியை வைத்து தட்டக்கூடாது.

தூசிகள் அங்கு உள்ள சிறுவர்களுக்கு பரவும். வகுப்பறைகளை ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்தினால் தூசிகள்  பரவாது. சுவாசப் பயிற்சிகளை (Breathing exercises) சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  செய்து வந்தால் நுரையீரல் சுருங்குவது, தேவைக்குக் குறைவாக வேலை செய்தல் ஆகிய பிரச்னைகள் வராமல்  காக்கலாம். சத்தான காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து மிகுந்த பருப்புகள் ஆகியவற்றில் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள்  அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, உடல் ஆரோக்கியமாகும்.

பொதுமக்கள் கண்ட இடத்தில் குப்பைகளை போடுவதையும், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் குப்பைகளை  எரிப்பதையும் தவிர்க்க வேண்டும். வாகன நெரிசலுக்கும், காற்று மாசுக்கேடு அடைவதற்கும்  இருசக்கர வாகனங்கள்  வைத்திருக்கும் ஒவ்வொருவரும் காரணம் என்பதை உணர வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு வாகனத்தை  பயன்படுத்தாமல் ஓரிரு வாகனத்தை பகிர்ந்து கொண்டாலே வாகன நெரிசல் பெருமளவு குறையும்.

இரு சக்கர வாகனத்தை முறையாக பராமரித்து அடிக்கடி இஞ்சின் ஆயிலை  மாற்றினால், வாகனத்தில் இருந்து  புகை  வராது. சரியாக பராமரிக்கப்படாத, தரமான எரிபொருள் நிரப்பப்படாத வாகனங்கள்தான் புகை மண்டலத்தை உருவாக்கி  காற்றை மாசடையச் செய்கின்றன. வீட்டுக்கு அருகில் உள்ள இடங்கள் என்றால் முடிந்த வரை நடந்தே செல்லுங்கள்.  தேவையற்ற எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும். காற்றையும் கொஞ்சம் சுத்தப்படுத்தும்...’’இந்த  ஆய்வை  ஐஐடி  கல்வி நிறுவனம் சார்பில் நடத்திய சூழலியல் மற்றும் நீர்வளத்துறை பொறியியல் துறையின் இணை பேராசிரியர் சிவ  நாகேந்திராவிடம் பேசினோம்...

நகரங்களில் பொதுவாக வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை 70 சதவிகிதம். தொழிற்சாலைகளின் மூலம்  வெளிப்படும் புகை மற்றும் மாசுக்கள் 20 முதல் 30 சதவிகிதம்.  வீடுகளிலிருந்து வெளிவரும் புகை 10 சதவிகிதம்.  இவ்வாறு  காற்றை மாசுக்கேடு அடைய செய்யும் காரணிகளை மூன்றுவகையாக பிரிக்கலாம். சென்னையின் சில  பகுதிகளில் மட்டுமே இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறோம். மணலி, பெருங்குடி ஆகிய பகுதிகளிலும் சுற்றுப்புற  மாசுக்கேடு எப்படி உள்ளது என அளவிட இருக்கிறோம்.

தி.நகர் பகுதியில் வாகன நெரிசல், கடைகள் அதிகரிப்பு, மக்கள்தொகை நெருக்கம் ஆகிய காரணங்களால் மாசுக்கேடின்  அளவு சற்று அதிகமாக உள்ளது. பழைய வாகனங்களுக்கு கொஞ்சம் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதிக அளவு  புகை உமிழ்பவை பழைய வாகனங்கள்தான். லாரிகளில் அளவுக்கு அதிகமான எடையை ஏற்றி ஓட்டினாலும் வெளிப்படும்  புகையின் அளவு அதிகமாக இருக்கும். ஒரு டன் ஏற்றிச் செல்லும் லாரியில் இரு டன் எடையை ஏற்றினால் வண்டி  திணறி அளவுக்கு அதிகமான எரிபொருளை குடிக்க ஆரம்பிக்கும். புகையையும் அதிகமாக உமிழ ஆரம்பிக்கும்.

வீடுகளை கட்டும் போது சூழலியல் மாசுக்கேடை ஏற்படுத்தாதவாறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும்.  இயற்கையான மரங்கள், செடி, கொடிகளை வீடுகளில், அலுவலகங்களில் போதிய அளவு வளர்த்தாலே  காற்று சுத்தமாகும். சூழலியலின் தன்மையும் மாறும்...’’ சென்னை  போன்ற நகரங்களில் ஏற்படும் சூழலியல்  மாசுக்கேடுகளில் இருந்தும், நுரையீரல் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை சொல்கிறார் நுரையீரல்  நோய்கள் நிபுணர் டாக்டர் வினோத்குமார்...

இரு வழிகளில் நமக்கு பாதுகாப்பு தேவை. ஒன்று நம்மை நாமே மாசுக்கேடுகளில் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்.  இரண்டாவது அரசு நம்மை பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிங்கப்பூர் போன்ற  நாடுகளில் 10  ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை ஓட்ட உரிமம் தருவதில்லை. ஏனெனில் பழைய கார், பேருந்து  போன்றவைதான் அதிக கரும் புகையை வெளியிட்டு சூழலை மாசுபடுத்தும். நம் நாட்டிலோ 10 வருடம் தாண்டியசரியாக பராமரிக்கப்படாத வண்டிகளே பெருமளவில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதை அரசு கட்டுப்பாட்டு விதிகள் கொண்டு கட்டுப்படுத்தினால் வாகன மாசுக்கேடு பெருமளவில் குறையும். புதிதாக  கட்டிடங்கள் கட்டும் போது அந்தப் பகுதியை சுற்றிலும் ஏற்படும் மாசுக்கேடானது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.  இதில் சில விதிகள் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைக்காமல் இயற்கையான இடங்களில்மைதானங்களில் விளையாட விட வேண்டும். இதனால் நுரையீரலுக்கு கிடைக்கும் நல்ல ஆக்ஸிஜனின் அளவு  அவர்களுக்கு  அதிகரிக்கும்.

எதிர்ப்பு சக்தியும் மேம்படும். காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சி, யோகா, சிறு ஓட்டம் என பழக்கப்படுத்திக் கொண்டால்  நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும். வாகனப் புகையும், மாசுக்களும் அதிகமுள்ள பகுதிகளில் செல்லும் போது N95  என்னும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம். சிக்னலில் வாகனங்கள் அதிக நேரம் நிற்கும் போது  மாசுக்கேடால்  அதிகம் பாதிக்கப்படுகிறோம். அதனால் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும் உள்ளே மாஸ்க் அணிந்து கொள்வது  தேவையற்ற மாசுக்களை தடை செய்து உங்கள் நலனை அதிகரிக்கும்.’’

No comments:

Post a Comment

arulalans