Followers

my adds

Wednesday, 25 May 2016

மலட்டுத்தன்மை -Infertility







குழந்தையின்மை

குழந்தையின்மைக்கான காரணங்களைப் பற்றி திருமணத்துக்குப் பிறகு கவலைப்படுவதற்கு பதில், குழந்தை பிறந்தது  முதலே விழிப்பாக இருந்தால் அடுத்த தலைமுறையை அந்தப் பிரச்னையிலிருந்து மீட்கலாம்...’’ என்கிறார்  மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் செல்வி. அவர் சொல்கிற தகவல்கள்அம்மா-அப்பா ஆகப் போகிறவர்களுக்கானவை அல்ல. அம்மா-அப்பா ஆனவர்களுக்கானவை.

திருமணமான தம்பதியர், வாரம் இரு முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள வேண்டும். 30 வயதுக்கு  உள்ளானவர்கள் 1 வருடம் வரை குழந்தைக்காக காத்திருக்கலாம். 35 வயதுக்கு மேலானவர்கள் 6 மாதங்கள் வரை  காத்திருக்கலாம். அதன்பிறகும் கருத்தரிக்காவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்பது பொதுவான அறிவுரை.  ஆனால், இதெல்லாம் சூழலும் உணவுப் பழக்கங்களும் வாழ்வியலும் முறையாக இருந்த போன தலைமுறை காலக்கட்டத்துக்கானவை. முறையற்றுப் போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் அந்த ஆலோசனை எந்த அளவுக்கு உசிதமானது என்பதுதான் கேள்வியே...

தன் மகனுக்கோ, மகளுக்கோ பிற்காலத்தில் வாரிசு இல்லாமல் போய் விடக்கூடாதே எனக் கவலைப்படுகிற தாய், தன் குழந்தை பிறந்த நொடியிலிருந்தே அதற்கான பாதுகாப்பு  நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இதென்ன பைத்தியக்காரத்தனமான தகவலாக இருக் கிறதே என நினைக்கிறீர்களா? குழந்தையின்மைப் பிரச்னைக்கான விதைகள், குழந்தைப் பருவத்திலிருந்தே நடப்பட்டு, வளர்க்கப்பட்டு, விருட்சமாகின்றன என்பதை உணர்வீர்களா?நாகரிக வாழ்க்கை போதைகளுக்குப் பழகியவர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் விந்தையாகத்தான் இருக்கும். சந்ததியைப் பெருக்கவும் பாதுகாக்கவும் நினைக்கிற ஒவ்வொருவரும் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்  என்பதற்காகவே இந்தத் தகவல்கள்...

சில தலைமுறைகளுக்கு முன்னால் 10, 12  குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தது  நம் மனித இனம்.  இன்று இயற்கையாக நிகழக்கூடிய கருத்தரிப்பு என்ற விஷயத்துக்காக லட்சங்களை வாரி  இறைப்பதும் வாழ்க்கையை தொலைத்துவிட்டுத் தவிப்பதும் ஏன்? இதைத் தெரிந்து கொள்ள கடந்த 50 ஆண்டுகளில்  மனித வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

முதலும் முக்கியமுமான விஷயம்... மனிதர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மறந்து, மறுத்து செயற்கையான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.  பூச்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றுக்கு இந்தப்  பிரச்னை வரவில்லையே... ஏனென்றால் அவை இயற்கையோடு வாழ்கின்றன. மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சி, அறிவு  வளர்ச்சியின் காரணமாக தம் வசதிக்காகவும் வாழ்க்கையை எளிமையாக்கவும் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மின்னணுச்  சாதனங்கள், வாகனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் போன்றவை அவர்களுக்கு நன்மை செய்வதைவிட  தீமைகளையே அதிகம் செய்வதாகத் தோன்றுகிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் உண்கிற  எல்லாமே ரசாயனக் கலவை என்பதை அறிவோமா?

காலை எழுந்ததும் உபயோகிக்கிற டூத் பேஸ்ட், சோப், பாடி லோஷன், ஷாம்பு, முடி அதிகரிக்கச் செய்வதாக வருகிற  எண்ணெய்கள், சீரம், முக அழகுச் சாதனங்கள், ஐ லைனர், மஸ்காரா, சென்ட்... இன்னும் நமக்குத் தெரியாத பியூட்டி  பார்லர் பொருட்கள் என அனைத்திலும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும், ஹார்மோன் சுழற்சியை பாதிக்கும் ரசாயனங்கள்  இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வீட்டில் தரையை சுத்தப்படுத்தும் திரவம் முதல் கழிவறையை சுத்தம் செய்கிற  டாய்லெட் கிளீனர் வரை எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

பற்களுக்கு மூலிகை பல்பொடியும், தலைக்கு சீயக்காயும், உடம்புக்கு நலங்கு மாவும் ஆரோக்கியத்தைக் கொடுத்தன  என்பதை மறந்து விடாதீர்கள். சருமத்தில் படக்கூடிய எந்த ரசாயனப் பொருளும் உடனடியாக  கிரகிக்கப்பட்டு ரத்தத்தில்  கலக்கிறது. இந்த நச்சுகள் செயற்கை ஹார்மோன்களாக செயல்படத் தொடங்குகின்றன. பிளாஸ்டிக் உபயோகத்தின்  பயங்கரம் பற்றி ஏற்கனவே நீங்கள் நிறைய அறிந்திருப்பீர்கள்.

பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்குவது, பிளாஸ்டிக் டப்பாக்களில் சூடான உணவுப் பொருட்களை அடைத்து  எடுத்து வருவது, பிளாஸ்டிக் கவர்களில் காய்கறி மற்றும் பொருட்களை அடைத்து ஃப்ரிட்ஜினுள் வைப்பது என  பிளாஸ்டிக்கின் உபயோகம் தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. அந்த பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருள்  உணவோடு கலந்து விஷமாக மாறி நம் ஆரோக்கியத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதைப் பற்றிப் பலரும்  யோசிப்பதில்லை. உணவுப் பொருட்களை கண்ணாடிப் பாத்திரங்களிலும் காய்கறி, பழங்களை ஈரத்துணிகளிலும் உணவுப்  பொருட்களை மஞ்சள் பைகளிலும் வாங்கிய காலங்களில் இத்தனை உடல்நலப் பிரச்னைகள் இருக்கவில்லை.  யோசியுங்கள்.

 உணவு...

நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதுதானா? இயற்கை வேளாண்மையை மறந்துவிட்டோம். காய்கறிகள், பழங்கள்தானியங்கள் என எல்லாம் செயற்கை உரங்கள் போட்டே வளர்க்கப்படுகின்றன. அறுவடைக்குப் பின் நம் கைகளுக்கு  வந்து சேரும் போது கெட்டுப் போகாமலிருக்க ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப்பட்டே வருகின்றன. இவை உள்  உறுப்புகளின் செயல்பாட்டையும் ஹார்மோன்களின் செயல்பாட்டையும் முற்றிலுமாக சிதைக்கக்கூடியவை.

தினமும் புரோட்டா கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகள் பல வீடுகளில் இருக்கிறார்கள். சாப்பிடக்கூடாது எனச்  சொன்னால், `ஊரே சாப்பிடுது... நான் சாப்பிட்டா என்ன?’ என்கிற எதிர்கேள்வி எழும். சாப்பிடாமலேயே இருப்பதற்கு  எதையாவது சாப்பிட்டால் தேவலை என்கிற எண்ணத்தில் மைதா உணவுகளான புரோட்டா, பப்ஸ், கேக் என கேடு  நிறைந்த உணவுகளை ஊட்டி வளர்க்கிறோம்.

இன்னொரு பக்கம் நம் பிள்ளைகளை Taller, Stronger, Sharper ஆக்குவதாக உத்தரவாதம் தருகிற  ஹெல்த் ட்ரிங்க்குகளை வாங்கிக் கொடுக்கிறோம். அது போன்ற பானங்களில் கலக்கப்படுகிற மால்ட்டும், தேவைக்கதிக  சர்க்கரையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அஸ்திவாரத்திலேயே ஆட்டம் காணச் செய்பவை.

என் பொண்ணு தினம் காலையில ஃப்ரெஷ் ஜூஸ்தான் குடிச்சிட்டுப் போவா’ எனப் பெருமையாகச் சொல்லிக்  கொள்வார்கள். அந்த ஃப்ரெஷ் பழங்களின் பின்னணியில் உள்ள விவசாய அரசியல் அவர்களுக்குத் தெரியாது. மாதுளம்  பழம் வாங்கும் போது வெள்ளையாக, சற்றே துவர்ப்புச் சுவையுடன் உள்ள நாட்டுப் பழத்தை வாங்க மாட்டோம்.

பார்க்கப் பளபளப்பாக, செக்கச் செவேலென கவர்ந்திழுக்கும் சிவப்பு நிற பழங்களையே வாங்குவோம். அதுதான்  கெடுதியானது. பெண் குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் என மேற்கத்திய உணவுகளைக் கொடுக்காமல், முளைகட்டிய  தானியங்களையும், ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களையும் ெகாடுப்பதை அம்மாக்கள் பழக்க  வேண்டும். பிராய்லர் சிக்கன் கொடுப்பதை அறவே தவிர்ப்பது அவசியமானது.

மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளையும், வெள்ளைச் சர்க்கரை, அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் தூள் உப்பு  போன்றவற்றையும் எண்ணெயில் வறுத்த பொருட்களையும் குறைத்துக் கொள்ளவும். ஊட்டச்சத்து பானங்களுக்கு  பதிலாக கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும். சீமைப்பால்தான் நமக்குப்  பெரும்பாலும் கிடைக்கிறது. அதிலுள்ள புரதம் நம் உடலுக்கு ஒவ்வாதது. நாட்டுப்பசு மாடுகள் குறைந்து வருகின்றன.

அவையும் செயற்கைக் கருவூட்டலின் மூலமே கருத்தரிக்கின்றன. பால் அதிகம் சுரக்க ஹார்மோன் ஊசிகள்  போடப்படுகின்றன. அவை நம் உடலில் கலந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும். மீறி கருத்தரித்தாலும் கருச்சிதைவு  ஏற்படும். எனவே, பால், காபி, டீயை முற்றிலும் தவிர்க்கவும். இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட உணவுப்  பொருட்களையே பயன்படுத்துங்கள். ஒருவேளை உணவு சமைக்காத உணவாக இருக்கட்டும். முளைகட்டிய பச்சைப்  பயறு, கேரட், வெள்ளரி, பழங்கள், உலர்ந்த பழங்கள் சிறந்தவை.

தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்குப் பதில் சிவப்பரிசி, மாப்பிள்ளை சம்பா, தினை, வரகு, சாமை போன்றவற்றைப்  பயன்படுத்துங்கள்.நம் உடல், உறுப்புகளின் கடிகாரம் படி இயங்குகிறது. உடலில் 12 முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை  ஒவ்வொன்றும் ஒரு நாளின் குறிப்பிட்ட 2 மணி நேரம் அரிய செயல்திறனோடு இருக்கும். அதை ஒட்டியே நமது உணவு  மற்றும் வாழ்வியல் இருக்க வேண்டும்.

 உதாரணத்துக்கு... அதிகாலை 3 முதல் 5 மணியை பிரம்ம முகூர்த்தம்  என்கிறோம். அது நுரையீரலுக்கான நேரம்.  
இந்நேரத்தில் எழுந்திருப்பது ஆரோக்கிய வாழ்க்கையின் அடிப்படைப் பழக்கமாக வேண்டும். ஓஸோன் கதிர்கள் இறங்கும்  இந்நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்தால் நுரையீரல் பிரச்னைகள் சரியாகும். உடல் பலப்படும். காலை 5 முதல் 7 மணி  வரை பெருங்குடலுக்கான நேரம். அந்த நேரத்தில்தான் காலைக்கடன் கழிக்கப்பட வேண்டும். 7 முதல் 9 மணி  வயிற்றுக்கானது என்பதால், காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். 9 முதல் 11 மணி வரை மண்ணீரலுக்கானது.  அப்போது திட, திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

மதிய உணவு 1 முதல் 3 மணிக்குள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இது சிறுகுடலின் நேரம். இரவு உணவு 7 முதல்  8 மணிக்குள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இரவு 11 முதல் 3 மணி வரை பித்தப் பை மற்றும் கல்லீரலுக்கான  நேரம். அப்போது தூங்கி ஓய்வெடுப்பதன் மூலம் வளர்சிதை மாற்றம் நல்லபடியாக நடைபெறும். உடலுழைப்பே இல்லாத  நிலையில் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சியும் யோகாவும் செய்ய வேண்டியது அனைத்து வயதினருக்கும்  அவசியம்.

வாழ்க்கை முறை...

உள்ளங்கையில் உலகம் என்கிற மாயைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தலைமுறைக் குழந்தைகள். இயற்கை  காற்றை சுவாசிக்காமல் விடிய விடிய ஏசி போட்டுக் கொண்டு கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு பெட்டிக்குள் அடைத்து  வைத்த மாதிரி தூங்குகிறோம். எப்போதும் கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைலுடன் உறவாடுகிறோம்.

படிப்பு, அதை விட்டால் செல்போன், கம்ப்யூட்டர் என Gadgets மயக்கத்தில் கட்டுண்டுக் கிடக்கிறோம். இவற்றில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சானது, ஆண் பிள்ளைகளின் மலட்டுத்தன்மைக்குப்  பெரியளவில் காரணமாகும். குழந்தைதானே என அலட்சியமாக விட்டீர்களானால், அவர்களுக்கு குழந்தைகளே இல்லாமல்  போகிற அபாயத்துக்கு நீங்களும் துணை போவதாகவே அர்த்தம்.

இதையெல்லாம் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் பெற்றோரின் கடமை. நம்மால் சரிசெய்து கொள்ளக்கூடிய சின்னச்  சின்ன விஷயங்களான இவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, பின்னாளில் விதியை சபிப்பதில் அர்த்தமில்லைதானே?...’’

No comments:

Post a Comment

arulalans