சுடும் நிலவும்
சுடாத சூரியனும் சினிமா பாடல்களில்தான் சாத்தியம்! நிஜத்தில் நிலவு
சுடுவதுமில்லை... சூரியன் சுட்டெரிக்கத் தவறுவதுமில்லை. பனிக்காலத்தில் வெயிலின்
சுகத்தையும், வெயில் காலத்தில்
பனியின் குளிர்ச்சியையும் நினைத்து ஆறுதல் அடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
அந்த வகையில் இது
சம்மர் சிணுங்கல் சீசன்! அம்மையில் இருந்து அலர்ஜி வரை வெயில் உண்டாக்கும் விதம்
விதமான நோய்கள் ஒரு பக்கமிருக்க, சருமம் கருத்துப்
போவது, அளவுக்கு அதிக வியர்வை,
வியர்க்குரு என புற
அழகையும் பெரிதாகப் பதம் பார்க்காமல் போவதில்லை கோடை. வெயிலின் இந்த ‘உள்ளே வெளியே’ ஆட்டத்தில் இருந்து அழகையும்
ஆரோக்கியத்தையும் எப்படி மீட்பது? ஆலோசனைகள்
சொல்கிறார் அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.
அழகின் முதல் எதிரி யார் தெரியுமா? வெயில்!
‘அட என்னங்க...
வெயில் பட்டாதான் உடம்புக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும்னும் சொல்றாங்க.
அதே நேரம் வெயில் பட்டா அழகு போயிடும்னும் சொல்றாங்க. எதைத்தான் நம்பறது’ என்கிற
கேள்வி பலருக்கும் வரலாம். சூரியனின் கதிர்களில் யுவிஏ, யுவிபி, யுவிசி என 3 உண்டு. காலை வெயிலில், அதாவது, 8 மணிக்கு முன்பான இளம் வெயிலில்தான் யுவிஏ
கதிர்கள் இருக்கும். இது சருமத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்பதால், இந்த நேரத்து வெயிலின் மூலம் வைட்டமின் டி
சத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
யுவிபி கதிர்கள்
சருமத்துக்குக் கெடுதலானவை. வெயில் நமது சருமத்தில் பட்டதும், மெலனோசைட்ஸ் என்கிற சுரப்பி தூண்டப்பட்டு,
மெலனின் என்கிற நிறமி
உற்பத்தி அதிகமாகும். அதனால்தான் நமது சருமம் கருப்பாகிறது. தொடர்ந்து நீண்ட நேரம்
வெயிலில் நின்று வேலை பார்க்க வேண்டியவர்களுக்கு, இந்தக் கருமை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, ஒரு கட்டத்தில் ‘மங்கு’ எனப்படுகிற
பிக்மென்ட்டேஷனாக மாறும். இந்த பாதிப்பைக் கொடுக்கக்கூடியது யுவிபி கதிர்கள்.
இக்கதிர்கள்
பெரும்பாலும் பாலைவனப் பகுதியில்தான் அதிகம் என்பதால் நாம் கவலைப்படத் தேவையில்லை.
மேலே சொன்னதெல்லாம் அக ஊதாக் கதிர்கள் என்றால், உச்சி வெயிலில் அகச்சிவப்புக் கதிர்களின்
தாக்கம் அதிகம் இருக்கும். முன்பகல் 11 மணி முதல் 3 மணி வரையிலான
வெயிலில் இது தீவிரமாக இருக்கும். இதன் தாக்கத்துக்கு ஆளாகிறவர்களுக்கு சீக்கிரமே
முதுமைத்தோற்றம் வரும். முடி கொட்டும். சருமத்தில் சுருக்கங்கள் விழும். வெயில்
என்றதும் பலருக்கும் தமது சருமத்தை நினைத்துதான் கவலையே... ஆனால், வெயில்,
கூந்தலையும்
விட்டு வைப்பதில்லை தெரியுமா?
வகிடு எடுத்து
தலை வாரும் வழக்கமுள்ளவரா நீங்கள்? உச்சி வெயிலில்
செல்லும் போது, வெயில் உங்கள்
வகிட்டின் வழியே உள்ளே சென்று, உடனடியாக
உடம்பிலுள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்யும். கூந்தலின் வேர்க்கால்களுக்குப் போகும்
ரத்த ஓட்டத்தையும் ஊட்டத்தையும் குறைக்கும். விளைவாக முடி உடைந்து, உதிரும். மண்டைப்பகுதியில் உள்ள துவாரங்கள்
திறந்து, வியர்வையும்
அழுக்கும் அதில் சேர்ந்து, வேர்க்கால்கள்
அடைபடும். அது அப்படியே பொடுகுப் பிரச்னையை உண்டாக்கும்.
உடலில் உள்ள
தண்ணீர் சத்து வெளியேறி விடுவதால், கூந்தல் வறண்டு,
நுனிகள் வெடிக்கத்
தொடங்கும். சிலருக்கு மண்டையில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திட்டுத்
திட்டாக வழுக்கை மாதிரி விழும்.அளவுக்கு அதிக வெயில் பட்டால், தலை முடியில் உள்ள தாமிரச்சத்து குறைந்து,
கருப்பான கூந்தல் செம்பட்டையாக
மாறும். வெயிலில் வெளியே செல்வதானால், குடை, தொப்பி என
ஏதேனும் ஒரு பாதுகாப்பு அவசியம்.
இரவில் தலைக்கு
விளக்கெண்ணெய் தடவி, ஈரப்பதத்தையும்
எண்ணெய் பசையையும் இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அழுக்கும் வியர்வையும்
சேர்ந்து முடி பிசுபிசுப்படையாமலிருக்க, அடிக்கடி தலையை அலசி சுத்தமாக்க வேண்டும்.
சன் ஸ்கிரீனா?
சன் பிளாக்கா?
சன் ஸ்கிரீன்
பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். வெயிலின் பாதிப்பிலிருந்து சருமத்தைப்
பாதுகாப்பதே அதன் வேலை. அதே வேலையைச் செய்வதுதான் சன் பிளாக்கும்.
அப்படியானால்
இரண்டும் ஒன்றா? எது பெஸ்ட்?
சன் ஸ்கிரீன்
என்பது எல்லா சருமங்களுக்கும் ஒத்துப் போகும் என்று சொல்ல முடியாது. பிசுபிசுப்பாக
இருப்பதால், பலரும் அதை
விரும்புவதில்லை. சன் பிளாக்கில் தண்ணீரே பிரதானம். எல்லா வகை சருமங்களுக்கும்
பொருந்தும். சன் ஸ்கிரீன் என்பதை ஒரு பிளெயின் கண்ணாடியாகக் கற்பனை செய்து
கொள்ளுங்கள். இந்தப் பக்கத்திலிருந்து வெளிச்சம் அந்தப் பக்கத்துக்கு ஊடுருவும்.
சன் பிளாக் என்பது ஒரு பக்கம் கருப்பு பெயின்ட் பூசப்பட்ட கண்ணாடி போன்றது.
வெளிச்சமோ, வெயிலோ
ஊடுருவாது!
எப்படித்
தேர்ந்தெடுத்து உபயோகிப்பது?
SPF எனப் போட்டிருக்கும்.
அதன் அர்த்தம் sun protection factor. இது 15, 30, 45, 60 எனக்
கிடைக்கும். 1 மணி நேரம்
வெயிலில் இருக்க வேண்டுமானால் எஸ்.பி.எஃப். 15 போதும். இன்னும் அதிக நேரம் இருக்க வேண்டும்
என்றால், அந்த 1 மணி நேரத்துக்குப் பிறகு மறுபடி அதே சன்
ஸ்கிரீனை தடவ வேண்டும். இதற்கு பதில் எஸ்.பி.எஃப். அதிகமுள்ள சன் ஸ்கிரீன் அல்லது
சன் பிளாக்கை தேர்ந்தெடுக்கலாம். ‘நான் காமிடன்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தால்,
அது சருமத் துவாரங்களை
அடைக்காது.
சன் ஸ்கிரீனோ,
சன் பிளாக்கோ எதுவானாலும் வெளியே கிளம்புவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே தடவப்பட வேண்டும்.
அப்போதுதான் அது சருமத்தின் ஆழம் வரை போய், பாதுகாப்பு தரும். வெயில் காலத்தில் ஒட்டுமொத்த
சூழலுமே சூடாகத்தான் இருக்கும். வெளியே போனால்தான் என்றில்லை, வீட்டுக்குள்ளே இருப்போர், காரில் பயணம் செய்வோர் கூட, கண்டிப்பாக சன் ஸ்கிரீன் அல்லது சன் பிளாக்
உபயோகிக்க வேண்டியது அவசியம்.
பார்லரில்
என்னவெல்லாம் செய்து கொள்ளலாம்?
வெயிலில்
அலைந்ததால் கருத்துப் போன சருமத்துக்கு ‘ஆன்ட்டி
டேன்’ ஃபேஷியல். சூடு உடம்புக்கு ‘டெர்மா சில்’ ஃபேஷியல் அல்லது கிர்ணி,
ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி உள்ளிட்ட பழங்களைக் கொண்டு
செய்யப்படுகிற பழ ஃபேஷியல்.
உடலின்
ஒட்டுமொத்த சூட்டையும் வெளியேற்றி, ரத்த ஓட்டத்தை
மேம்படுத்த, கூந்தலுக்கு ஹாட்
ஆயில் மசாஜ். உடலைக் குளுமையாக்கவும், ரத்த ஓட்டத்தை தூண்டச் செய்யவும் பாதங்களுக்கு ‘சில் பெடிக்யூர்’.
கால்களின்
எரிச்சலையும் வறட்சியையும் போக்கி, உடலுக்குக்
குளுமையேற்ற, பால் மற்றும்
அரோமா ஆயில் கொண்டு செய்யப்படுகிற பெடிக்யூர்.
கிளியோபாட்ரா
குளியல் தெரியுமா?
நன்னாரி வேர்,
வெட்டி வேர், விளாமிச்சை வேர் மூன்றையும் சிறிது தண்ணீரில்
போட்டு, முதல் நாள் இரவே
ஊற வைக்கவும். மறுநாள் அந்தத் தண்ணீரை குளிக்க வைத்திருக்கிற தண்ணீருடன் கலந்து,
குளித்தால், குளிர்ச்சியாகவும் இருக்கும். சென்ட்
உபயோகிக்காமலே உங்கள் உடல் மணக்கும். கழுதைப் பாலில் குளித்த கிளியோபாட்ரா
பின்பற்றிய அழகுக் குறிப்பு இது!